காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் இல்லை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் ஊராட்சி கண்டியூர் கிராமம் பெரிய தெருவில் கடந்த 3 மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். மேலும் அடிக்கடி குடிநீர் கலங்கலாக சுகாதாரமற்ற முறையில் வருவதாகவும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அந்தபகுதி மக்கள் கூறுகிறார்கள்.

150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தபகுதியில் குடிநீருக்காக 1 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய அவல நிலை இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள அஞ்சாறு வார்த்தலை பகுதி வீரசோழன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதிக்கு மினி குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார், வில்லியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி செல்வராஜ் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story