டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதன் அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளது. மதுப்பிரியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசலிலே அமர்ந்து மது அருந்துவதாகவும், எனவே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், அய்யப்பா சேவா சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திடீரென்று கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், உரிய அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் தாசில்தார் பாபு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.