மின் இணைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

பனமரத்துப்பட்டி:-
மின் இணைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் வீரபாண்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மின்இணைப்பு விவகாரம்
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த பெரிய சீரகாபாடி பகுதியை சேர்ந்த சேகர் மனைவி கிருஷ்ணவேணி. இவர் தனது வீட்டிற்கு உயர் மின்னழுத்த மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்தார். அவரது வீட்டிற்கு அங்குள்ள நாடார் தெரு பகுதி வழியாக கம்பம் மூலம் மின் இணைப்பு வழங்க இருந்தனர். அந்த பகுதி வழியாக உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் கொண்டு செல்ல கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணவேணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் கிருஷ்ணவேணிக்கு உரிய பாதுகாப்புடன் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, சேலம் தெற்கு தாசில்தார் செல்லதுரை, மின்சார உதவி செயற் பொறியாளர் ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர், மின்சார ஊழியர்கள், போலீசார் உதவியுடன் மின் இணைப்பு வழங்க வந்தனர்.
பேச்சுவார்த்தை
ஆனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக மின் இணைப்பு கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






