கோவில் நில ஏலத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு-வாக்குவாதம்


கோவில் நில ஏலத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு-வாக்குவாதம்
x

கோவில் நில ஏலத்தை பொதுமக்கள் புறக்கணித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

குத்தகைக்கு விடுவதற்காக...

உப்பிலியபுரம் ஒன்றியம், வெங்கடாசலபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை வருடாந்திர குத்தகைக்கு விடுவதாக இந்து சமய அறநிலையத்துறையினர் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அனந்தநாராயணப் பெருமாள் கோவில் முன்பு பொதுமக்கள் திரண்டனர். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர்(பொறுப்பு) ஜெய்கிசான் முன்னிலையில் ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் கோவிலுக்கு சொந்தமான 77 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு முன் வைக்கப்பட்டன. அதில் குத்தகை பாக்கி வைத்திருந்தவர்கள் மொத்த தொகையையும் கட்டிய பின், தனிநபர் ஒருவரது 7 ஏக்கர் நில குத்தகை தொகை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் பாக்கித்தொகையாக இருப்பதும், இதுவரை கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதும் கண்டறிப்பட்டது.

வாக்குவாதம்

இதையடுத்து பொதுமக்கள் ஆவேசத்துடன் பாக்கி குத்தகை தொகையையும் வசூலித்த பின் மொத்த நிலத்தையும் ஏலம் விட கோரிக்கை விடுத்தனர். மேலும் தனி நபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து, குத்தகை பாக்கி வசூல் செய்யவும், கோவில் நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தி, ஏலம் விடவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஏல நடவடிக்கைகளை புறக்கணித்து பொதுமக்கள் வெளியேறினர். இதனால் ஏல நடிவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறையினர் அறிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோபனபுரம் வேணுகோபாலசுவாமி, காசி விஸ்வநாதர் கோவில் வகையறாக்கள் நிலங்கள் குத்தகை ஏல நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கும், சம்பந்தப்பட்ட தனி நபர் ஆக்கிரமிப்பே காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story