கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள்


கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள்
x

குளித்தலை அருகே கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

பணிகள் தடுத்து நிறுத்தம்

குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் மற்றும் மருதூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவிரி ஆற்றின் அருகே உள்ள தங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை செய்த பின்னர் பணிகளை தொடர வேண்டும் என அதிகாரிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பின்னர் குமாரமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story