மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த வேனை பொதுமக்கள் சிறைபிடிப்பு


மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த வேனை பொதுமக்கள் சிறைபிடிப்பு
x

ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிடங்கில் மருத்துவ கழிவுகள் இறக்கிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிடங்கில் மருத்துவ கழிவுகள் இறக்கிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ கழிவுகள்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா ஊராட்சி சத்யா நகர் ஆரணி சாலை அருகே தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்துள்ள நபர் அங்கு தனியார் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை எடுத்து வந்து தரம் பிரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகளில் நோயாளிகளின் மருத்துவ கழிவுகள், மனித கழிவுகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், நெகிழி பைகளில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிடங்கை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது.

அதுபற்றி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் லட்சுமி சேட்டுவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று பகலில் மருத்துவ கழிவுகளை ஏற்றிய வேன் அங்கு வந்தது. இதனையறிந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த வேனை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் அந்த வேனின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிசேட்டு, ஊராட்சி செயலாளர் குமரன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அவர்களிடம் கிடங்கில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

அங்கு வந்த ஆற்காடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் கிடங்கில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story