சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 1:15 AM IST (Updated: 24 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

வெற்றிக்கரமாக நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கியதையொட்டி சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சந்திரயான்-3 லேண்டர்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சி நேற்று மாலை 5.20 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதன்படி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கண்காட்சி மைதானத்தில் நிலவில் சந்திரயன்-3 லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். இதில் பலர் தேசிய கொடியை கையில் ஏந்தி நின்றனர். நிலவில் சந்திரயான் லேண்டர் வெற்றிக்கரமாக தரையிறங்கியதும் அங்கிருந்த பொதுமக்கள் வெற்றி கோஷமிட்டனர். மேலும் அங்கு பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும், விஞ்ஞானிகளை பாராட்டு விதமாகவும் 150 அடி நீளமுள்ள தேசிய கொடியை பிடித்து கொண்டு புதிய பஸ் நிலையம் பகுதியில் ஊர்வலாக செல்லப்பட்டது. இந்த ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இனிப்பு

இதேபோல் கோட்டை மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சந்திராயன்-3 லேண்டர் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது.

இதை பொதுமக்கள் பலர் பார்த்து ரசித்தனர். பின்னர் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிக்கரமாக தரையிறங்கியதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


Next Story