அரசு கலைக்கல்லூரியில் பொது கலந்தாய்வு தொடக்கம்
அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நடைபெற்றது
கோவை, ஜூன்.2-
கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், உயிரியியல், பி.ஏ. ஆங்கிலம், தமிழ் உள்பட 23 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் மொத்தம் உள்ள 1433 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வு நடைபெற்றது. இதன் மூலம் 100 இடங்கள் நிரம்பின.
இதைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பி.காம், சி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் பி.காம். பாடப்பிரிவில் 24 பேர், பி.காம். சி.ஏ.பிரிவில் 23 பேர், பி.காம். ஐ.பி.பிரிவில் 17 பேர், பி.பி.ஏ. பாடப்பிரிவில் 19 பேர் என 83 பேர் தங்களது விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆணையை கல்லூரி முதல்வர் உலகி வழங்கினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) கணினி அறிவியல், ஐ.டி., கணிதம், விலங்கியல், வேதியியல், புள்ளியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) அரசியல் அறிவியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும், 5-ந் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வர் உலகி தெரிவித்தார்.