கல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
க.பரமத்தி அருகே உள்ள பவுத்திரம் ஊராட்சி பகுதியில் புதிதாக 2 கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலி தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு பொறியாளர் ராஜசேகர், கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றி திரை மூலம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் விவசாயம், ஆடு, மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் ஊராட்சிக்கு அதிக நிதி வரும். இதனால் ஊராட்சியில் பல பணிகள் செய்யலாம் என ஆதரவு தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக்கூறினர்.