திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக நிற்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் காட்சி பொருளாக நிற்கின்றன. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி நகராட்சி பகுதியில் உருவாகும் குப்பைகள் 4 மூன்று சக்கர வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வந்தன. ஆனால் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதிக அளவிலான கடைகள் போன்ற காரணத்தால் குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக மூன்று எண்ணிக்கையில் 3 சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் இதுவரை இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 4 வாகனங்களும் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை. இதனால் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக இருக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நகர பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.