வங்கார குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
வங்கார குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் வங்கார குளம் உள்ளது. இந்த குளத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குளித்து வந்தனர். குளத்தின் மேல் கரையில் அய்யப்பன் கோவில் இருப்பதால் இங்கு வருகிற அய்யப்ப பக்தர்களும், முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் அதிக அளவில் இந்த குளத்தில் குளித்து செல்வார்கள். ஆனால் இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் மண்டி, கோரைகள் அதிக அளவில் சூழ்ந்து குளிப்பதற்கு பயனற்ற நிலையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிற வரத்து வாரிகள் சரிவர தூர்வாரப்படாமலும், குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே இந்த குளத்தில் உள்ள கோரைகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி தூர்வாரி ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீரை நிரப்பி மக்கள் குளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.