அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதை-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதை-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:47 PM GMT)

அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

புதர்சூழ்ந்த நடைபாதை

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி விநாயகர் கோவிலுக்கு முன்பு பள்ளத்தாக்கான பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளி கல்லூரி செல்வதற்கும் கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே சென்று தான் அய்யனன்கொல்லி, கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர் உள்பட பல பகுதிகளுக்கு பஸ்களில் செல்ல வேண்டும். இந்தநிலையில் இந்த பகுதிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் புதர்சூழ்ந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் அந்த நடைபாதையில் நடந்து செல்லும் போது தவறி விழும் நிலை நிலவுகிறது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோட்டப்பாடியில் உள்ள நடைபாதை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மாணவ-மாணவிகள் தவறி விழுந்து விடுகிறார்கள். இதேபோல் புதர் சூழ்ந்து காணப்படுவதால் வனவிலங்குகள் வந்தால் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்புகள் ஏறபடும் அபாயம் நிலவுகிறது. நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தொட்டில் கட்டி சுமந்து செல்கிறோம். எனவே நடைபாதையை சீரமைத்து சிமெண்டு சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story