விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம்

விழுப்புரம் கே.கே.நகர் பகுதியில் இருந்து சாலாமேடுக்கு செல்லும் பிரதான சாலையில் பழைய சீனிவாசா மண்டபம் பின்புறம் வி.ஜே. நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்பணியின்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் ஒன்றை அகற்றாமல் அதை சாலையின் நடுவிலேயே அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்க பணியை செய்து முடித்தனர். இதனால் தற்போது அந்த மின்கம்பம், அங்குள்ள சாலையின் நடுவே உள்ளது. அவ்வழியாக தினந்தோறும் பள்ளி மாணவ- மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். அதுபோல் பொதுமக்கள் ஏராளமானோர் அத்தியாவசிய தேவைக்காக வாகனங்களில் சென்று வருகின்றனர். அவர்கள், அச்சாலையில் செல்லும்போது அங்கு நடுவே இருக்கும் மின் கம்பத்தால் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் யாரேனும் வாகனங்களில் அதிவேகமாக வரும்பட்சத்தில் அந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் ஏதேனும் லாரி சென்றால் அந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் விரைந்து செயல்பட்டு அங்குள்ள சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதனை சாலையோரமாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story