சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த நாயனூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை அக்கிராம மக்கள், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதன் காரணமாக, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றித்தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக நேற்று விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதற்காக கிராம மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாரும் அங்கு வரவில்லை. அதுபோல் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த கோட்டாட்சியரும் வர தாமதம் ஏற்பட்டது.

பொதுமக்கள் தர்ணா

இதனால் வெகுநேரம் காத்திருந்த அக்கிராம மக்கள் திடீரென கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பாதை வசதி செய்துதர வேண்டுமென அவர்கள் கோஷம் எழுப்பினர். அந்த சமயத்தில், போராட்டத்தின் போது ஒரு மூதாட்டி, திடீரென அருள் வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பிரச்சினை குறித்து கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த திடீர் போராட்டத்தினால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story