கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா


கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் தர்ணா

கிணத்துக்கடவு அருகே பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் குனியமுத்துரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெடி வைத்தபோது, அருகில் உள்ள வீடுகள் மீது கற்கள் விழுந்தது. இதனால் மேற்கூரை உடைந்தது. இது தொடர்பாக சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக அந்த கல்குவாரி செயல்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதாக தெரிகிறது. இதை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதை அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர்கள் மதுக்கண்ணன், சனுபர்ரகுமான், பாண்டிப்பிச்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது, அந்த கல்குவாரியில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை, வீடுகள் மீது கற்கள் விழுவதால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது, தொடர்ந்து கல்குவாரி செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், புதிதாக கல்குவாரி தொடங்கும்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பது இல்லை, எனவே அந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story