கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை அருகே வாகவாசல் ஊராட்சி ராஜாப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் கோரிக்கை தொடர்பாக பதாகையை கையில் ஏந்தி பிடித்தனர். தங்கள் பகுதியில் உள்ள கண்திறந்த நாயகியம்மன் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து போக்குவரத்து சாலையை அடைத்து அராஜகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து மனு கொடுக்க அறிவுறுத்தினர். அதன்பின் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடையை அகற்றுதல்
இதேபோல அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். இதேபோல குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் ஆவுடையான்கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் கோரியும் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை அருகே பெருங்களூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி திலகவதி என்பவர் தனது வீட்டின் முன்பு பாதையை பயன்படுத்த முடியாமல் குடிநீர் குழாய் அமைத்து தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றி தருமாறு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தி கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 422 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி கவிதப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.