விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோவை
விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கலந்துரையாடல் கூட்டம்
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. ம.தி.மு.க.வின் கோட்டை யாக கோவை உள்ளது. அண்ணாவின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளோம். 2 நாட்களாக கோவை, திருப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன்.
விலைவாசி உயர்வு
புதிய திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தி வருகிறது. ம.தி.மு.க., தி.மு.க.வுடன் சனாதனத்திற்கு எதிராக நின்று வருகிறது. பாசிச சக்திகளை வீழ்த்த திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ளது போல் வேறு எங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ, செயல்படுத்தவோ இல்லை. ஜி.எஸ்.டி.யால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய அரசு மீது பொது மக்களுக்கு நாள்தோறும் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ரஜினிகாந்த் பேச்சு
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவரது இல்லங் களிலும் தேசியகொடியேற்றுவது நல்ல திட்டம் தான். ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை, யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்கிறார்.
மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் என்கிறார். பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். எனவே அவரை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.