நெல்லையில் இன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்; கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான முகாம் இன்று (சனிக்கிழமை) அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.
முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு, புதிதாக ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவினியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல் போன்றவை குறித்து மனு அளிக்கலாம். மேலும் 9342471314 என்ற மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுவினியோக திட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.