புத்தாடை, பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்


புத்தாடை, பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூரில் புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கடலூர்

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் முன்கூட்டியே தயாராகி விட்டனர். கூட்ட நெரிசலில் சிரமப்பட கூடாது என்பதற்காக முன்கூட்டியே புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் குவிந்தனர்.இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக பட்டாசுகள் விற்பனையும் சூடுபிடித்தது. சாலையோரங்களில் சட்டை, பனியன், பெண்களுக்கான சேலைகள், சிறுவர், சிறுமிகளுக்கான பேண்ட், சட்டை, பனியன் உள்ளிட்ட பல்வேறு துணிகள் விற்பனை கடைகளும் புதிதாக வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதிலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர்.

கூட்டம் நிரம்பியது

தீபாவளி பலகாரம் செய்வதற்காக, அதற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் மளிகை கடைகளில் கூட்டம் நிரம்பியது. நேற்று புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. கடலூர் இம்பீரியல் சாலை, லாரன்ஸ்ரோடு, நேதாஜி ரோடு, திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலை என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பியது.

சிறுவர், சிறுமிகளுக்கான தீபாவளி பொம்மை துப்பாக்கி விற்பனையும் சூடுபிடித்தது. ரூ.40 முதல் ரூ.100 வரை பொம்மை துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

கடலூர் மாநகரை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், மளிகை பொருட்கள் வாங்குவற்காக ஒரே நேரத்தில் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கோபுரங்களில் நின்றும் போலீசார் போக்குவரத்து சரி செய்து, குற்றச்சம்பங்கள் நடைபெறாமல் தடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story