கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு:தர்மபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதால் தர்மபுரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உருவானது. இதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதேபோன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனிடையே கோடை விடுமுறைக்கு பின் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
அலைமோதிய கூட்டம்
பள்ளிகள் இன்று திறக்கும் நிலையில் தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தலங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று இருந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோன்று பென்னாகரம், அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்தந்த பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
மாணவ-மாணவிகள் உற்சாகம்
அதன்படி அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து உள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.