அந்தியூர் அருகே குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


அந்தியூர் அருகே குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x

அந்தியூர் அருகே குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு

அந்தியூர் அருகே குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஆக்கிரமிப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். பவானி அருகே உள்ள தொட்டியபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தொட்டியபாளையம் வழியாக குறிச்சிகரடு வரையுள்ள மண் ரோட்டை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அங்கன்வாடி மையம்

அந்தியூர் அருகே உள்ள வில்லாமரத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த இடத்தை தனி நபர் ஒருவர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையில் ரோட்டை ஒட்டியவாறு அங்கன்வாடி மையம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே ரோட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

பெருந்தலையூர் அருகே உள்ள குட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் ஊரில் ஆற்றுக்கும், மயானத்துக்கும் செல்லும் பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டார். எனவே மயானத்திற்கு செல்ல ரோடு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

காக்ளியர் இன்பிளாண்ட் கருவி

விஜயமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த விஜயராஜ் மனைவி பூங்கொடி என்பவர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-

எனது மகன் விக்னேசுக்கு 9 வயதாகிறது. காது கேட்காது. வாய் பேச முடியாது. அவனுக்கு முதல் -அமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு வலது காதில் காக்ளியர் இன்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்தேன். இருந்தும், காதில் சீழ் வடிந்ததால், காதுக்குள் பொருத்தப்பட்ட காக்ளியர் இன்பிளாண்ட் கருவி அகற்றப்பட்டது.

மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் காதில் சீழ் வருவது நின்றது. ஆனால் காதில் பொருத்தப்பட்டு இருந்த காக்ளியர் இன்பிளாண்ட் கருவி பழுதானது. வேறு கருவி பொருத்த ரூ.7 லட்சம் செலவாகும். அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாததால், அவனால் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியவில்லை. முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யவும், கருவியை வாங்கித்தரவும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் தாமதம் ஆகிறது. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு காக்ளியர் இன்பிளாண்ட் கருவி பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

233 மனுக்கள்

பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'ஈரோடு மாநகராட்சி, 20-வது வார்டில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்காவின் சுவரை, அந்த வார்டு கவுன்சிலர் தனது சொந்த பயன்பாட்டுக்காக உடைத்து சேதப்படுத்தி உள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story