அசம்பாவிதம்-விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
அசம்பாவிதம்-விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்கமாறு அந்தந்த மாவட்ட போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இன்று (சனிக்கிழமை) இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. இன்று மாலை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 300 போலீசாரும், 100 ஊர்க்காவல் படையினரும், அரியலூர் மாவட்டத்தில் சுமார் 700 போலீசாரும், 100 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நடவடிக்கை
மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெறும். எனவே, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு போலீசாரால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
100-க்கு தொடர்பு கொள்ளலாம்
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசாரின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். மோட்டார் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தகையவர்கள் பற்றிய தகவலை போலீசாருக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பற்றிய ரகசியம் காக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 'காவல் உதவி' என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்த வேண்டும். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டை கொண்டாட போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.