தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2023 8:15 PM GMT (Updated: 13 Sep 2023 8:15 PM GMT)

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நீலகிரி

கூடலூர்

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

25 அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்டு, ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19 அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் உள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றவுடன் 6 முக்கிய மாவட்டங்களில் உள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக கூடுதலாக 25 அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அச்சப்பட தேவையில்லை

மாநிலம் முழுவதும் ரூ.1,100 கோடியில் ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கூடலூரில் 200 படுக்கை வசதிகள் கொண்டதாகவும், பொதுப்பணித்துறை சார்பில் 52,541 சதுர அடி பரப்பில் 3 இடங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. டயாலிசிஸ் பிரிவுக்கு 7 படுக்கைகளும், மனநலப் பிரிவுக்கு 10 படுக்கைகளும், அவசர சிகிச்சை பிரிவுக்கு 14 படுக்கைகளும், கண் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு 20 படுக்கைகளும், எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு 8 படுக்கைகளும், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவுக்கு 66 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தமிழக -கேரளா எல்லைகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி உள்பட 6 மாவட்டகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி, சுல்தான்பத்தேரி மற்றும் பந்தலூர் தாலுகா கூவமூலா பகுதிக்கு நேற்று முதல் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கா. ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா, ஊட்டி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன், கூடலூர் மேலாளர் அருள் கண்ணன் உள்பட தொழிற்சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story