முககவசம் அணிவது தேவையா, வேண்டாமா?
கொரோனா தொற்று குறைந்துள்ள இக்காலக்கட்டத்தில் பொது இடங்களுக்கு செல்லும் நபர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டுமா அல்லது தேவையில்லையா என பொதுமக்கள் தரப்பில் கருத்துகள் கூறப்பட்டுள்ளது.
காரைக்குடி,
கொரோனா தொற்று குறைந்துள்ள இக்காலக்கட்டத்தில் பொது இடங்களுக்கு செல்லும் நபர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டுமா அல்லது தேவையில்லையா என பொதுமக்கள் தரப்பில் கருத்துகள் கூறப்பட்டுள்ளது.
முகக்கவசம்
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகமெங்கும் பரவி லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என அந்தந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது கொரோனா தொற்று பரவியபோது ஊரடங்கு அமல்படுத்துதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், வெளியே செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிவது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவி ஏராளமானோர் பலியாகினர். அதன் பின்னர் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் படிப்படியாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு தற்போது கொரோனா பரவல் இல்லாத மாநிலமாக உள்ளது.
ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அக்காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முககவசம் அணிந்தனர். தொற்று குறைந்த பின்னர் படிப்படியாக அதிலிருந்து விலகி தற்போது வழக்கமாக வெளியே சென்று வருகின்றனர். இருப்பினும் இன்னும் சிலர் கூட பொதுஇடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடைவீதி, பஜார்கள், ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
மருத்துவர்கள் ஆலோசனை
இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இல்லாமல் தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கார்த்திக் (என்ஜினீயர்):- ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதன் பின்னர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு முககவசம் அணிந்து பின்னர் இந்த தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொண்டனர். இருப்பினும் தற்போது யாரும் முககவசம் அணியவில்லை. இருந்தாலும் தமிழக அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை பொதுமக்களும், இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கடைபிடித்து அதிகம் கூட்டம் உள்ள இடத்தில் கட்டாயமாக முககவசம் அணிந்து வரவேண்டும். அப்போது தான் மீண்டும் கொரோனா இல்லாத நாடாக மாற்ற முடியும்.
முத்துலட்சுமி (என்ஜினீயரிங் மாணவி):- தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இதிலிருந்து காப்பாற்ற மருத்துவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். வீட்டில் தனியாக இருக்கும் போது அணிய தேவையில்லை. தற்போது பண்டிகை காலமாக உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அது நமக்குதான் பாதுகாப்பு என்பதை உணர வேண்டும். ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் கூட்டம் கூடும் இடத்திற்கு செல்வதை தவிர்த்தால் போதுமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பானது
ராமநாதபுரம் அருகே வெள்ளரி ஓடை கிராமத்தை சேர்ந்த கீதா:- கொரோனா உருவான காலத்தில் முக கவசம் அணிவதை அரசு அமல்படுத்தியது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையிலும் மீண்டும் முக கவசம் அணிவது பாதுகாப்பானதாக இருக்கும் என அரசு தெரிவித்து வருகின்றது. தற்போது உள்ள வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தூசி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக கவசம் அணிவது பாதுகாப்பான ஒன்றுதான்.
ராமேசுவரத்தை சேர்ந்த சந்தியா:- தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட இடங்களிலும் முககவசம் அணிவது நல்லது. ஏனென்றால் மழைகாலம் என்பதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி எப்போதும் முககவசம் அணியவேண்டும் என கட்டாயப்படுத்துவது தேவையற்றது. அரசு நடத்தும் மதுக்கடைகளில் முககவசம் அணிவதை கட்டாயபடுத்திவிட்டு பொதுமக்களை முககவசம் அணிய சொன்னால் மக்களும் ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.