இறந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


இறந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

பனப்பாக்கம் அருகே இறந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் செய்தனர்.

ராணிப்பேட்டை

உடலை புதைக்க எதிர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் குச்சிபனந்தோப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஜாட்டியர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நெமிலி தாசில்தாரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு கடந்த ஆண்டு கரிவேடு கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு 36 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 80 வயது முதியவர் திடீரென்று இறந்துவிட்டார். அவரது உடலை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தகவல் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மாற்று இடம்

அதன்பேரில் அங்கு வந்த நெமிலி தாசில்தார் பாலசந்தர் கிராம பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி, கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரசேகர், கருத்திருமன், ஆலப்பாக்கம் நவீன், சேரி ரகு ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story