கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

இதில் வெங்கோடு கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட தனியார் நிலத்தில் கல்குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும். கல்குவாரியால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்படும். கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படும்.

கல்குவாரி வாகனங்களால் கிராம சாலை குண்டும், குழியுமாக ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story