புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 7:30 PM GMT (Updated: 7 Feb 2023 7:30 PM GMT)
சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே கணவாய் காடு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி ஆகியோரிடம் அந்த பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் கெங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் கணவாய் காடு குடியிருப்பு பகுதிக்கு சற்று தொலைவில் உள்ளதாகவும், 200 குடும்பத்தினர் குடியிருப்பு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்றும், இதன்மூலம் குடியிருப்பு பகுதியில் பஸ்கள் நின்று செல்லும் என்றும் வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் கணவாய் காடு பொதுமக்கள் நேற்று முறையிட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தியிடம் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயன் இல்லை என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி மற்றும் தி.மு.க. பேரூர் செயலாளர் பாலமுருகன், கவுன்சிலர்கள் கணவாய்காடு பகுதிக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கை குறித்து இடங்களை பாா்வையிட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, தற்போது ேதர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகளை நிறுத்தி வைக்கப்படும் என்றும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பியிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் உறுதி கூறினார்.

---


Next Story