பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மேல்நிலைநீர்தேக்க தொட்டி அருகே பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

பாதாளசாக்கடை திட்டம்

விழுப்புரம் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், பானாம்பட்டு, வழுதரெட்டி, சாலாமேடு ஆகிய 5 ஊராட்சிகளில் ரூ.293 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அண்மையில் பார்வையிட்ட அமைச்சர் நேரு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தார்.

பணிகளை தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் ஆசிரியர்நகர் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே உந்து நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து பணிகள் நடைபெற்றதால் நேற்று ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் முறைப்படி மனு அளிக்குமாறு கூறினர். இதை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story