டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

வத்திராயிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கூமாப்பட்டி ராமசாமியாபுரம் பகுதியில் கடந்த 2020 வரை அரசு டாஸ்மாக்கடை செயல்பட்டு வந்தது. பின்னர் கொரோனா காலகட்டத்தில் இந்த கடை அடைக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் டாஸ்மாக்கடையை திறக்க மதுபானங்களை லாரியில் ஏற்றி வந்தனர். அப்போது பொதுமக்கள் கடையை திறக்க கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கடையை திறக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மீண்டும் அரசு மதுபானக்கடையை திறப்பதற்கு அதிகாரிகள் மதுபானங்களை ஏற்றிக்கொண்டு வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலையில் பெரிய கற்களை அடுக்கி கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் டாஸ்மாக் கடை மாவட்ட மேலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாக மதுபானங்களை ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து லாரியை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.இதையடுத்து வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துமாரி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.கடை திறப்பதற்கு பலத்த எதிர்ப்பு இருந்ததால் தற்காலிகமாக கடை திறப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story