இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு


இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

இலட்சிவாக்கம் ஊராட்சியில் இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனை வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

எல்லாபுரம் ஒன்றியம், இலட்சிவாக்கம் ஊராட்சியில் பெரம்பூர் மற்றும் பாஞ்சாலி நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 5½ ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்பு பகுதி உள்ளது. இந்த இடத்தை பஞ்சாயத்து நிர்வாகம் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தோப்பை அழித்து ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கடந்த 15-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த மாந்தோப்பு புறம்போக்கு நிலத்தில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அந்த பகுதியில் உள்ள மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இயற்கை வளங்களை அழித்து அந்த இடத்தில் யாருக்கும் வீட்டுமனை வழங்க கூடாது. மாற்று இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களுடைய குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனை வழங்கும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story