உடையாபட்டி கடைவீதியில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


உடையாபட்டி கடைவீதியில்  டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x

தோகைமலை அருகே உடையாபட்டி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டி கடைவீதியில் அரசு டாஸ்மாக் கடை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்து உள்ள சுற்றுப்புறங்களில் குடியிருப்புகள், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், முக்கிய வணிக கடைகள், கோவில்கள் அமைந்து உள்ளன. இதனால் டாஸ்மாக்கடை அமைக்கப்படும் போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து பேரூர் கடைவீதியிலேயே செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இப்பகுதியில் டாஸ்மாக் செயல்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என அனைவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் நலன்கருதி பேரூர் கடைவீதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பலமுறை கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதேபோல் டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி இப்பகுதியினர் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விளம்பர பதாகைகள் ஒட்டியும், கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதனால் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதும் டாஸ்மாக் கடை இயங்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடைவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story