காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி


காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
x

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமானதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

யானைகள் நடமாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதிகளில் 11 காட்டு யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி கிராமத்தில் வனப்பகுதி அருகே உள்ள நாகராஜ் என்பவரின் விவசாய தோட்டத்தில் மா மரங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்து உள்ளது.மேலும் அந்த யானைகள் கடந்த 5 நாட்களாக 2 குழுக்களாக பிரிந்து கோட்டையூர், காரிகானப்பள்ளி, கொங்கனப்பள்ளி, எப்ரி ஆகிய ஊர்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை அட்டகாசம் செய்து வருகின்றன.

பீதி

காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் பீதியடைந்து வருகின்றனர். இந்த காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிகளுக்கு விரட்ட வனத்துறை சார்பில் 30 வனத்துறை அதிகாரிகள் தற்போது கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் யானைகளை பின் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து அவைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாள்தோறும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் இப்பகுதியில் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சப்பட்டு வருவதால் உடனடியாக யானைகளை விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிர முயற்சி

மேலும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள விளை நிலப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் இரவு நேரத்தில் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது கர்நாடக பகுதிக்கு யானைகளை விரட்ட தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தமிழக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story