'கிணற்றை காணோம்' என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
கோவையில் வடிவேல் பட காமெடி பாணியில் கிணற்றை காணோம் என்று குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை
கோவையில் வடிவேல் பட காமெடி பாணியில் கிணற்றை காணோம் என்று குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
குறை தீர்ப்பு முகாம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், பேரூர் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனையை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மனையை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதி
குறைதீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையில், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க தம்பதியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணெய் கேன் இருந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் மண்எண்ணெய் கேனை அவர்களிடம் இருந்து பிடுங்கினர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கணபதி மதி கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 40), அவருடைய மனைவி ராணி (38) என்பதும், அவர்களது நிலத்தை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்து மண்எண்ணெய் கேனுடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனுவை பெற்றுக்கொண்டு, அவர்களை சமாதானம் செய்து, சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மதுபாட்டில்களுடன் வந்த பொதுமக்கள்
கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை போராட்டம் நடத்தி அகற்றினோம். இந்த நிலையில் அங்கு மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பெண்களுக்கும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், கட்டுமான பணியின்போது விபத்தில் சிக்கி போத்தனூரை சேர்ந்த அருண்குமார், சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சட்டப்படியான உரிய இழப்பீடு கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கூடுதல் பஸ்கள் வேண்டும்
பீளமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பீளமேடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ்களை நிறுத்துவதில்லை. இதனால் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் பீளமேடு ஹாட்கோ காலனிக்கு இயக்கப்பட்ட 41 டி, 21 சி, 24, 65 எஸ், 21 என், 25 என், 3k உள்ளிட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் குறைந்தபட்ச கூலி குறைவாக கொடுக்கும் மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.
மின் கட்டணம் ரூ.70 ஆயிரம்
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி புகார்
கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த முஸ்தபா- ரபியா தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், நாங்கள் சாரமேடு பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதம் மின் கட்டணம் கணக்கீடு எடுப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அதன் பின்னர் எங்கள் செல்போன் எண்ணுக்கு மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் வந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் கேட்டோம். அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் செலுத்த வேண்டாம் 30 ஆயிரம் செலுத்தினால் போதும். அதுவும் வாரம் 6 ஆயிரம் கட்டுங்கள் என தெரிவித்தனர். எங்களுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே இதுவரை மின் கட்டணம் வரும். ஆனால் தற்போது, மின் கட்டணமாக ரூ.70 ஆயிரம் வந்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.