அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி பொதுமக்கள் மனு
மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் 36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் கொடுத்த மனுவில், "ரெயில் நகர், ஜெயாநகர், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதில் உள்ள வால்வில் நீர் கசிவு மற்றும் குழாய் உடைப்பால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே வால்வுகளை மாற்றி குடிநீர் சீராக வழங்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.
டவுன் பாட்டப்பத்து தேவிபுரம் ஊர் மக்கள் அளித்த மனுவில், "மாநகராட்சிக்கு சொந்தமான பொது தெரு பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க புதிய வடிகால் அமைக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
20-வது வார்டு கவுன்சிலர் ஷேக்மன்சூர் கொடுத்த மனுவில், "சேரன்மாதேவி ரோடு ரொட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பெரிய தபால் நிலையம் வரை கழிவு நீரோடை தூர்ந்து போய் கிடக்கிறது. எனவே அங்கு புதிய கழிவுநீரோடை அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
22-வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் அளித்த மனுவில், "ஆண்டாள்புரத்தில் கழிவுநீரோடையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், அதை அகற்றிவிட்டு புதிய ஓடை கட்ட வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.
தியாகராஜ நகர் 54-வது வார்டு எல்.ஐ.சி. காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எல்.ஐ.சி. காலனியில் கட்டி முடிக்கபட்ட பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்" என்று கூறி உள்ளனர்.
டவுன் பாப்பா தெரு மக்கள் கொடுத்த மனுவில், "பழுதடைந்த வாய்க்கால் தடுப்பு சுவரை புதுப்பித்து உயரமாக கட்ட வேண்டும். மேலும் சிறுவர் விளையாட்டு பூங்காவில் பழுதடைந்த உபகரணங்களை சீரமைத்து தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் எம்.சி.கார்த்திக் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், "நெல்லை சந்திப்பு 3-வது வார்டு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்" என்று கூறி உள்ளனர்.
இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமாமலை மூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.