டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மனு
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகர், தேவர் நகர், எம்.எம்.நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் குடியிருப்பின் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையினால் பெண்கள், குழந்தைகள் செல்ல முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வர முடியவில்லை.
மது பிரியர்கள் தொந்தரவு
அந்த அளவுக்கு மது பிரியர்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அவர்கள் டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி வந்து சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, தகாத வார்தையால் திட்டுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை மது பிரியர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
சிலர் போதையில் உடலில் ஆடை இல்லாமல் படுத்து கிடக்கிறார்கள். மது பிரியர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மது குடித்துவிட்டு பாட்டில்களை விளை நிலங்களில் போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தமிழ்நாடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) ஒருங்கிணைப்பாளர்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்களை தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக வாய்மொழி உத்தரவாக பணி வழங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஆனால் எங்களுக்கு பணி நியமன ஆணையோ, பணி வரன்முறையோ இன்றி கடும் சிரமத்திலும், மிகுந்த மன உளைச்சலிலும் பணிபுரிந்து வருகிறோம். எனவே கடந்த காலங்களை போல் நாங்கள் பெற்று வந்த பணி நியமன ஆணையும், பணி வரன்முறையும், கருவூலத்தில் ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
அரும்பாவூர், தழுதாழை, ஏ.மேட்டூர், பூலாம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், பி.ஏ.சி.எல். இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நாங்கள் கட்டிய பணத்தை திரும்பப்பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராம ஊராட்சியை சோ்ந்த ஆதிதிராவிடர் தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருக்களில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 287 மனுக்கள்
கூட்டத்தில் மொத்தம் 287 மனுக்களை கலெக்டர் பெற்றார். கடந்த வாரம் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த 15 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும், பணியின்போது உயிரிழந்த சத்துணவு பணியாளர்கள் 2 பேரின் வாரிசுதாரர்களான மேரி, ஜீவிதா ஆகியோருக்கு முறையே வெங்கலம், கத்தாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
உரிய விளக்கம்...
மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் வர வேண்டும் என்றும், பிற திங்கட்கிழமைகளில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் ஒரே நபர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வர வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு வருகை தராத முதல் நிலை அலுவலர்களிடம் உரிய விளக்கம் கோர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.