அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 263 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள முத்து நகர், முல்லை நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், செங்குணம் கிராம ஊராட்சிக்குட்பட்ட எங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி செய்து தர வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையையும், புளு மெட்டல் கிரஷர்களையும் அகற்ற வேண்டும். பஸ் நிறுத்தம் வேண்டும். எங்கள் பகுதிகளை கவுல்பாளையம் கிராம ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்பு
வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் விவசாயிகள் உற்பத்தி ஆர்வலர் குழு சார்பில், விவசாயிகள் கொடுத்த மனுவில், விவசாய விளை நிலங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வரும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் நிலங்களுக்கு சென்று வர சிரமமாக உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
துறைமங்கலம் கே.கே.நகர், நியூ காலனி, வடக்கு தெரு பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கே.கே.நகர் பகுதியில் உள்ள பொதுப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை பெரம்பலூர் தாசில்தார் மூலம் அகற்றியும், அந்த நபர் மீண்டும் பொது பாதையை ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.
கலெக்டரிடம் கெஞ்சிய குடும்பத்தினர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முடிந்து முகாம் அலுவலகத்துக்கு செல்ல காரில் ஏற வெளியே நடந்து வந்த கலெக்டர் கற்பகத்தை குன்னம் தாலுகா, பென்னகோணம் காலனி தெருவை சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரின் குடும்பத்தினர் சூழ்ந்து தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஞ்சினர். அப்போது அவர்கள் கூறுகையில், பிச்சைபிள்ளையின் மூத்த மகனான மாற்றுத்திறனாளி செல்வம் (வயது 39) கடந்த 7-ந்தேதி இரவு வீட்டின் அருகே தூங்கி கொண்டிருந்தார். அப்போது மறுநாள் அதிகாலையில் செல்போன் அடகு வைத்து பணம் பெற்று கொடுத்ததில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக செல்வத்தை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் சாதி பெயரை சொல்லி திட்டி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றுள்ளார். இதற்கு எங்கள் தெருவை சேர்ந்த ஒருவரும் உடந்தையாக இருப்பதாக தெரிகிறது. அவர்களை பிடித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கெஞ்சினர். அதற்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தை விட்டு கலைந்தனர். ஏற்கனவே இது தொடர்பாக மங்களமேடு போலீசார் தற்செயலான தீ பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.