சாலையை சீரமைத்து பஸ் வசதி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சாலையை சீரமைத்து பஸ் வசதி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தரக்கோாி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை தீர ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது பரங்கிப்பேட்டை தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ திருக்கழிப்பாலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாவட்டத்தின் கடைகோடியில் எங்கள் கிராமம் உள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து கரடுமுரடாக இருக்கிறது. மேலும் பஸ் வசதியும் இல்லை. இதனால் தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து, உடனடியாக பஸ் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story