மேயரிடம், பொதுமக்கள் மனு


மேயரிடம், பொதுமக்கள் மனு
x

பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்பொறியாளர் பாஸ்கர், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், சுகாதார அலுவலர்கள் முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் வினியோகம்

மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் தலைமையில் சாந்திநகர் பொதுநல அபிவிருத்தி சங்க தலைவர் தங்கையா, செயலாளர் அசுபதி, பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் கடந்த ஒரு வருட காலமாக சரியாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாந்திநகரில் பழுதான சாலைகளை சரி செய்ய வேண்டும். சாந்திநகரில் தூத்துக்குடி மற்றும் சீவலப்பேரி சாலைகளை இணைக்கக்கூடிய பிரதான சாலை செல்கிறது. அங்கு எல்.இ.டி.விளக்குகள் அமைத்து தரவேண்டும், என்று கூறியுள்ளனர்.

தார்சாலை

நெல்லை எஸ்.என்.ைஹரோட்டில் டவுன் தெப்பக்குளம் எதிரே சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளது. அந்த மண்ணை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் மனு கொடுத்தார்.

நெல்லை ஹைரோடு வியாபாரிகள் பாதுகாப்பு சங்கதலைவர் சிலுவைப் பிச்சை, செயலாளர் தனசேகரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு சாலையை முற்றிலும் தார்சாலையாக அமைத்து தரவேண்டும், என கூறியுள்ளனர்.

டவுன் பூதத்தார் முக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், டவுன் கீழரதவீதி மார்க்கெட் பகுதியில் பூதத்தார் சன்னதி தெருவில் 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடம் தற்போது சேதம் அடைந்து கிடக்கிறது. அதனை உடனே சீரமைத்து தர வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.

தற்காலிக கடை

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன்- பேராட்சி மாற்றுத்திறனாளி தம்பதி தங்களுக்கு கடை வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அவர்களுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான தற்காலிக கடையை வழங்கி அதற்கான ஆணையை மேயர் பி.எம்.சரவணன் வழங்கினார்.


Next Story