தோகைமலை-பாளையம் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


தோகைமலை-பாளையம் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி தோகைமலை- பாளையம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

குடிநீர் வினியோகம்

தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி பரந்தாடியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பரந்தாடி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், நல்லாக்கவுண்டம்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தோகைமலை- பாளையம் சாலையில் உள்ள பரந்தாடி பிரிவில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story