காவிரி குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


காவிரி குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

காவிரி குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

தா.பேட்டை:

குடிநீர் இணைப்பு

திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இது குறித்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில், தா.பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வடிகால் வாரியத்தால் காவிரி குடிநீர் இணைப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு மேட்டுப்பாளையம் பேரூராட்சி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புதியதாக கட்டப்பட்ட தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், குடிநீர் வழங்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தா.பேட்டை கடைவீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களிடம் முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், முசிறி குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கண்ணதாசன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முசிறி தாசில்தார் அலுவலகத்தில் தா.பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த இரு தரப்பினரையும் அழைத்து பேசி குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பரமேஸ்வரன், ரவி மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை முசிறி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பாத்திமா சகாயராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கண்ணதாசன், ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் தா.பேட்டை பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், குடிநீர் வழங்கல் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மேட்டுப்பாளையம் குடிநீர் தொட்டியில் இருந்து தா.பேட்டை கிராம குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்படுவதாக பேரூராட்சி தலைவரால் தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை கண்டறிவதாக உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவை அதிகரிப்பது என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் தா.பேட்டை பேரூராட்சிக்கு முழுமையான அளவில் குடிநீர் கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.


Next Story