டாஸ்மாக் கடை இடமாற்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கல்லலில் பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கல்லல்,
கல்லலில் பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை
காரைக்குடி அருகே கல்லலில் பஸ் நிலையம் எதிரேயுள்ள தெருவில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வந்தது. நேற்று திடீரென கல்லல் டாஸ்மாக் மதுபானக்கடை சந்தைப்பேட்டை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது மதுபானக்கடை மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மேல்நிலைப்பள்ளியும், கல்லல் பெரிய கோவிலும் உள்ளது. பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே மதுபானக்கடை இருக்க கூடாது என்ற கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு எதிராக கல்லலில் டாஸ்மாக் கடை மாற்றப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய கடை வாசலில் இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடை இடமாற்றத்திற்கு அந்த பகுதி பொதுமக்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசில் மனு
இந்நிலையில் கடை இடமாற்றத்தை ரத்து செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்க வேண்டும் என கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாச்சியப்பன், அ.தி.மு.க. கல்லல் ஒன்றிய செயலாளரும், தேவபட்டு ஊராட்சி மன்ற தலைவருமான செந்தில்குமார், கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கீழப்பூங்குடி ராஜா, பா.ஜனதா கல்லல் தெற்கு ஒன்றிய தலைவர் செல்லமுத்து, நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அனைத்து கட்சி குழுவினர் ஒன்று திரண்டு கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லல் வருவாய் ஆய்வாளர் தலைமையில் வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.