சங்கராபுரம் ரேஷன் கடை கட்டுமான பணி விவகாரம்:பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் ரேஷன் கடை கட்டுமான பணி விவகாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 8 மற்றும் 13 வார்டு பகுதியில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவன்னஞ்சூர் அல்லது தியாகராஜபுரம் சாலையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் சிரமத்தை சந்தித்த அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சங்கராபுரம் கடைவீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் தனிநபர் ஒருவரது எதிர்ப்பால், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே அந்த கட்டிடத்துக்கு சென்று வர வழியில்லை என்று அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால் மனு மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், அப்பகுதி மக்கள், பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்ரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அ வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.