4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்க பூஞ்சேரி ஏரிக்கரை உடைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்க பூஞ்சேரி ஏரிக்கரை உடைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x

4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்க 20 அடி அகலத்திற்கு ஏரியின் கரை உடைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செங்கல்பட்டு

சாலை வரிவாக்க பணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்-பூஞ்சேரி முதல் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக லட்சக்கணக்கான லோடு மண் தேவைப்படும் என்பதால் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராமப்புற ஊராட்சிகளில் உள்ள பல ஏரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் லாரி மூலம் 1000 லோடு மணல் எடுக்க பொதுப்பணித்துறை நிர்வாகம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுமதி வழங்கியது.

ஏரிக்கரை உடைப்பு

இந்த நிலையில் நேற்று பூஞ்சேரி ஏரியில் லாரி மூலம் மண் எடுக்க ஏரியின் கரைப்பகுதியை 20 அடி அகலத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பூஞ்சேரி பொதுமக்கள் இந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அந்த ஏரியின் கரைப்பகுதியை உடைக்காமல் மணல் எடுக்கும் பணியை மேற்கொள்ளாமல், கரைப்பகுதியை ஏன் உடைத்தீர்கள் என்று அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடுத்து நிறுத்தம்

விரைவில் பருவ மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கரைப்பகுதியை உடைத்ததால் மழை நீரை எப்படி சேமிக்க முடியும், ஏரியின் தாழ்வான பகுதிகளின் வழியாக சென்று மணல் எடுக்காமல் கரைப்பகுதியை ஏன் உடைத்தீர்கள், கரைப்பகுதியை மீண்டும் சரிசெய்து அமைப்பது என்பது கடினமாக வேலையாகும் என்றும், அதனால் இந்த ஏரியில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்படும் என்று கூச்சலிட்டு மணல் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

அதிகாரிகள் சமாதானம் செய்தும் அந்த பகுதி மக்கள் சமாதானமடையவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அங்கு மணல் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.


Next Story