மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
அதிவேகமாக மணல் லாரிகள் சென்றதால் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அதிவேகமாக மணல் லாரிகள் சென்றதால் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அதிவேகமாக சென்ற மணல் லாரிகள்
திருச்சியை அடுத்த திருவளர்சோலை அருகே உள்ள பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் மணல் ஏற்றுவதற்காக எதிரே மூன்று டிப்பர் லாரிகள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்றன.
மேலும், அதில் ஒரு லாரி சதீஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த சதீஷ், மனைவி, குழந்தையுடன் சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார்.இதில் 3 பேரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போராட்டம்
இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணல் குவாரிக்கு சென்ற லாரிகள் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் நடைபெற்ற குதிரை பந்தயத்திற்காக சாலைகளில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால் மணல் லாரிகள் கட்டுப்பாடு இன்றி அதிவேகமாக சென்று வருகிறது. இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்கவும், மணல் லாரிகள் வேக கட்டுப்பாடுடன் சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.