சேலம் பொன்னம்மாபேட்டையில் கோவில் பயன்பாட்டில் இருந்த கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சேலம் பொன்னம்மாபேட்டையில் கோவில் பயன்பாட்டில் இருந்த கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
எதிர்ப்பு
சேலம் பொன்னம்மாபேட்டையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பயன்பாட்டிற்காக அங்கு சாலையோரம் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த அந்த கட்டிடம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அப்புறப்படுத்தக்கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கோவில் நிர்வாகத்திடம் கூறி வந்தனர்.
இந்நிலையில், கோவில் பயன்பாட்டில் இருந்த அந்த கட்டிடத்தை இடிக்க நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் கட்டிடம் உள்ளதாகவும், பிறகு ஏன் இடிக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி அங்கு சென்று இடத்தை பார்வையிட்டார்.
அப்போது, அவரிடம் பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்த இடத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி இடித்து அகற்றுவதை ஏற்க முடியாது? என்று கோவில் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.