பெருமுகை மணல் குவாரியில் பொதுமக்கள் போராட்டம்

வேலூரை அடுத்த பெருமுகையில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மணல் குவாரியில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரை அடுத்த பெருமுகையில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மணல் குவாரியில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் குவாரி
வேலூரை அடுத்த பெருமுகை-அரும்பருதி பாலாற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மணல் அள்ளப்பட்டு லாரிகள், டிராக்டர்கள் மூலம் பெருமுகையில் உள்ள மணல் விற்பனை மையத்தில் (யார்டு) சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு யூனிட் மணல் ரூ.3,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களுக்கும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்களுக்கும் மணல் வழங்கப்பட்டு வருகிறது. குவாரியில் நாள் ஒன்றுக்கு 100 யூனிட் மட்டுமே மணல் அள்ள வேண்டும். பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ள கூடாது. நேரடியாக மணல் விற்பனை செய்ய கூடாது. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மணல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுப்பணித்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக...
ஆனால் குவாரிக்காக அனுமதி பெற்ற பாலாற்றங்கரையோரம் மணலை அள்ளாமல் விதியை மீறி பெருமுகை பாலாற்றங்கரையோரம் மணல் அள்ளுவதாகவும், 100 யூனிட்டுக்கு அதிகமாக மணல் அள்ளி முறைகேடாக விற்பனை செய்வதாகவும் பெருமுகை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். கடந்த மாதம் 6-ந் தேதி பெருமுகை பாலாற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டின் அருகே அனுமதி இன்றி மணல் அள்ளியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகள், பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடிக்க முயன்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணல் அள்ள அனுமதி அளிக்கப்படாத பெருமுகை ஊராட்சியை ஒட்டிய பாலாற்றங்கரையோரம் மணல் அள்ளுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் மணலை அள்ளுவதற்கு வசதியாக ஆற்றங்கரையோரம் உள்ள பனைமரங்களை பொக்லைன் மூலம் அகற்றி வீசினர்.
மேலும் பாலாற்றங்கரையில் ஏராளமான வாகனங்களில் ஒரேநேரத்தில் மணல் அள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. இதற்கிடையே பெருமுகை சுடுகாட்டு பகுதியில் தொடர்ந்து விதியை மீறி மணல் அள்ளப்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
இதனை கண்டித்தும், அனுமதி அளிக்கப்படாத இடத்தில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெருமுகை பொதுமக்கள் நேற்று காலை மணல் குவாரியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ளுபவர்கள், டிராக்டர் டிரைவர்கள் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலின்போது டிராக்டர் டிரைவரை திடீரென பொதுமக்கள் தாக்கினர். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெருமுகையில் இயங்கும் மணல் விற்பனை மையத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






