குழிக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


குழிக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x

குரும்பேரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் குழிகளை வெட்டியதை கண்டித்து குழிக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

குரும்பேரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் குழிகளை வெட்டியதை கண்டித்து குழிக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழிகள்

கந்திலி ஒன்றியம் குரும்பேரி ஊராட்சி பகுதியில் உள்ள களர்பதி அருந்ததியர் வட்டம் பகுதியில் ஊராட்சி சார்பில் தார் சாலை அமைக்க 500 மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் 3 அடி அளவுக்கு குழி வெட்டப்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் சரவணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது தார் சாலை போட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் வெட்ட அனுமதி கிடையாது என கூறினார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராமுவிடம் சரவணன் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் குழிகளை மூட முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், களர்பதி பகுதியில் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு மண் எடுக்க 3 அடி அளவுக்கு குழி 500 அடி தூரம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் குழிக்குள் மழைநீர் தேங்கியுள்ளது. குழந்தைகள் வீட்டுக்குச் செல்லும்போது குழிக்குள் விழுந்து அடிபட்டுள்ளது.

இது பற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம கூறிய போது வீட்டிற்கு செல்லும் பகுதிக்கு மட்டும் கல் போட்டுக் கொள்ளுமாறு கூறுகிறார். எனவே எங்களுக்கு பழையபடி குழிகளை மூடி தர வேண்டும் என்றனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story