லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னம்:
சாலையில் கிடக்கும் கற்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரியில் இருந்து நெடுவாசலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை கடந்து, கல்பாடி கிராமத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிரஷருக்கு கற்களை உடைப்பதற்காக சுமார் 15-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், தினமும் 50-க்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன.
இந்த டிப்பர் லாரிகளில் அளவிற்கு அதிகமாக கற்கள் ஏற்றி செல்லப்படுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளில் வரும்போது கற்கள் கீழே கொட்டி சாலையில் கிடப்பதாகவும், இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி விடுவதாகவும், கால்நடைகளின் கால்களில் கூர்மையான கற்கள் குத்தி காயம் ஏற்படுவதாகவும், பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
லாரிகள் சிறைபிடிப்பு
இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், கிரஷர் உரிமையாளர்களுக்கும் முறையாக தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நெடுவாசல் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று அந்த வழியாக வந்த சுமார் 10 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த கிரஷர் மேற்பார்வையாளர்கள், அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இனி லாரிகளில் கற்கள் கீழே கொட்டாத அளவிற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.