பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2023 1:36 PM GMT (Updated: 23 Sep 2023 1:37 PM GMT)

சதாகுப்பம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

சதாகுப்பம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சதாகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு தேவாலயம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

அதன்படி பள்ளி முன்பகுதியில் இருக்கக்கூடிய சிலாப் மற்றும் பள்ளியின் மேல்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகளை பெயர்த்து புதிதாக ஓடுகள் வைக்கப்படுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

ஆனால் ஓடுகள் தரமானதாக இல்லை என்றும், இதனை பயன்படுத்துவதால் மீண்டும் பள்ளி கட்டிடம் மழை பெய்தால் ஒழுகக்கூடிய சூழல் ஏற்படும் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை.

மேலும் அவ்வப்போது மேல் சுவர்கள் இடிந்து விழுந்து மாணவ-மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் அடிக்கடி காயம் அடைகின்றனர். எனவே பழுது பார்ப்பதை நிறுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ெபாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பணிகள் நிறுத்தப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story