கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் கோவிலுக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். அந்த இடம் பள்ளிக்கு சொந்தமானது என புகார் வந்ததை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் அங்கு சென்று சென்று கட்டிடப்பணிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டாலின் காலனி மக்கள் சமுதாய தலைவர் சுடலை மணி, செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் கோவிலுக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் லெனின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கோவில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் அவர்களுக்கு தாசில்தார் லெனின் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. அதில், அரசு புறம்போக்கு நகராட்சி பள்ளிக்கூடம் என்ற இடத்தில் காளியம்மன் கோவிலை இடம் மாற்ற செய்ய வேண்டும் என்று கோரும் கோரிக்கை நிராகரித்து உத்தரவிடப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் பள்ளிக்கூடம் இடத்தில் விரிவாக்க பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தடுத்து இடையூறு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்படுகிறது. மீறி நடந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story